தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்குவங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் , நாளையும் ஓரிரு இடங்களிலும், 17 முதல் 20-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலும், 16-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்..
18-ம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19, 20 தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
Read More: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!