தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு தொடர்ந்துள்ளது.. இந்த வழக்கு இன்று நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகளுக்கு இல்லாத நிபந்தனைகளை தவெகவுக்கு விதிப்பதாக கூறினார்..
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி சொல்ல முடியும் என்று வாதிட்டார்..
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே என்று கேள்வி எழுப்பினார்.. முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பொது மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல.. பொதுக்கூட்டம் நடத்துபவர்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடத்த வேண்டும்.. தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.. கர்ப்பிணி, மாற்றுத் திறனாளிகள் வர வேண்டும் என்று கூறி மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கலாமே? பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.. திருச்சியில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லை என்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்..
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எந்த இடத்திற்கும் அனுமதி மறுக்கப்படாமல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.. மேலும் திருச்சி பரப்புரையில் தவெக தொண்டர்களின் செயல்களை புகைப்படமாக தாக்கல் செய்தார்.. அதனை பார்த்த நீதிபதி, இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்கப்படுத்த வேண்டாமா என்று தவெக தரப்புக்கு கேள்வி எழுப்பினார்..
இதையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்திய நீதிபதி, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் காவதுறைக்கு உத்தரவிட்டார்.. மேலும் இந்த விதிமுறைகள் குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை செப்டம்பர் 24 –ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..



