வங்கிகள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகையை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய முடிவின் காரணமாக, இனி வங்கிகள் மற்றும் முகமைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான இறக்குமதிகளுக்கும் 3 சதவீத ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியை (IGST) முழுமையாக செலுத்தியாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வருவாய் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஐஜிஎஸ்டி விலக்கு காலக்கெடு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார். அந்த சலுகை காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்காததால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகள் அனைத்தும் ஒரே மாதிரியான சீரான வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
வரி சலுகை காரணமாக ஒரு குறிப்பிட்ட இறக்குமதி வழிமுறை மட்டுமே சந்தையில் முன்னுரிமை பெற்று ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கிலேயே, ஏப்ரல் 1 முதல் இந்த புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் மூலம் சந்தையில் தங்கம் தடையின்றி எளிதாக புழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முதலில் தங்கத்திற்கும், பின்னர் வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கும் இந்த வரி விலக்கு சலுகை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 31-ல் இச்சலுகை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்ககம் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களின் புதிய பட்டியலை ஏப்ரல் 17 அன்று வெளியிட்ட போதிலும் வரி விலக்கு தொடர்பான அரசாணையை புதுப்பிக்காமல் ரத்து செய்துள்ளது.
Read More : அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆந்திரா விரைகிறார் முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை!



