அனைவரின் சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்களை வருமான வரித்துறை அணுகும் என்று தகவல் வெளியான நிலையில் PIB இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது..
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் 2026 ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை அனைவரின் சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்களை அணுகும் அதிகாரம் பெறும் என்று தகவல் சமீபத்தில் வைரலானது.. அதாவது அந்த பதிவில் “அனைவரையும் கண்காணிக்கும் வகையில் வருமான வரித்துறைக்கு அதிகாரம்” என்று” கூறப்பட்டிருந்தது..
இந்த நிலையில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகமான PIB இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவலை தவறானது என்று PIB மறுத்துள்ளது. இது முழுமையாக தவறான தகவல் என்று தெரிவித்துள்ளது.
உண்மை என்ன?
வருமான வரி சட்டம் 2025 விதிகளின்படி, வருமான வரித்துறைக்கு பொதுமக்கள் அனைவரின் டிஜிட்டல் தகவல்களை பார்க்க எந்த அதிகாரமும் இல்லை. இந்த அதிகாரம் சோதனை மற்றும் கணக்கெடுக்கு நடவடிக்கைகளுக்கே மட்டுமே பொருந்தும். அதுவும், பெரும் அளவிலான வரி ஏய்ப்பு (tax evasion) குறித்து தெளிவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும்.
நேர்மையான வரி செலுத்துபவர்கள் கவலைப்பட தேவையில்லை.. என்று PIB தெளிவாக கூறியது.. மேலும் “ நேர்மையாக வரி செலுத்தும் மக்களின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள், டிஜிட்டல் தரவுகள் எதையும் வருமான வரித்துறை அணுக முடியாது.
வழக்கமான கணக்கீடு, சரிபார்ப்பு அல்லது மதிப்பீடு (routine assessment) ஆகியவற்றில்
டிஜிட்டல் கணக்குகளை அணுகும் அதிகாரம் இல்லை. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல் முற்றிலும் தவறானது, இது மக்களிடம் தேவையற்ற பயத்தை உருவாக்கும் முயற்சி என PIB சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் “ 1961 முதல் அமலில் இருக்கும் வருமான வரி சட்டத்திலேயே, சோதனை, கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது ஆவணங்கள், ஆதாரங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளது. புதிய சட்டம் அதையே தொடர்ச்சியாகவும், வரம்புகளுடன் பயன்படுத்துவதற்காக மட்டுமே. இந்த விதிகள் கருப்பு பணம் மற்றும் பெரும் வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே. சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால், சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவலை நம்ப வேண்டாம்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
புதிய வருமான வரி சட்டம்
2026 ஏப்ரல் 1 முதல், தற்போது நடைமுறையில் உள்ள 1961 வருமானவரி சட்டம் மாற்றப்பட்டு, புதியதாக வருமானவரி சட்டம் 2025 அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய சட்டத்தின் முக்கிய நோக்கம், வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமையாக்குவதுதான். பழைய சட்டத்தில் இருந்த 819 சிக்கலான பிரிவுகள் குறைக்கப்பட்டு, தெளிவான மற்றும் எளிதில் புரியும் விதமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
பழைய 1961 சட்டத்தின் பிரிவு 132ன் கீழ், வருமானவரி அதிகாரிகளுக்கு தேடுதல் (Search) மற்றும் சோதனை (Survey) நடவடிக்கைகளின் போது, வீடுகள் அல்லது அலுவலகங்களில் நுழைவது, ஆவணங்கள், சாதனங்கள் (கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் போன்றவை) பறிமுதல் செய்வது, டிஜிட்டல் தரவுகளை அணுகுவது போன்ற அதிகாரங்கள் ஏற்கனவே இருந்தன.
புதிய வருமானவரி சட்டம் 2025 இல், இதற்கான விதி பிரிவு 247 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில், அனுமதி பெற்ற அதிகாரி (Authorised Officer) தேடுதல் அல்லது சோதனை நடவடிக்கையின் போது, கணினி அமைப்பு அல்லது “மெய்நிகர் டிஜிட்டல் இடம்” (Virtual Digital Space) என்பவற்றின் அணுகல் குறியீட்டை (password/access code) மீறி தரவுகளைப் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில், வரி ஏமாற்றம் செய்யும் பலர் தங்கள் முக்கிய தகவல்களை கிளவுட் சர்வர்கள், ஆன்லைன் ஸ்டோரேஜ், மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் கணக்குகள் போன்ற இடங்களில் சேமித்து வைப்பதால், இத்தகைய டிஜிட்டல் தரவுகளைப் பெறுவது வரி ஏமாற்றத்தை நிரூபிக்கவும், எவ்வளவு வரி தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிடவும் மிகவும் அவசியமாகியுள்ளது.
அதனால், இந்த புதிய விதி பொது மக்களின் தனியுரிமையை பாதிக்க அல்ல;
பெரிய அளவிலான வரி ஏமாற்றம் மற்றும் கருப்பு பணம் தொடர்பான வழக்குகளில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : முதலாளி இல்ல.. கடவுள்..! ஒவ்வொரு ஊழியருக்கும் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பரிசாக வழங்கிய நிறுவனம்!



