அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு கிடைக்கும். இந்த சட்டத்தின் நோக்கம்,
“விளாடிமிர் புடினின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாக இருக்கும் வருமான வழிகளை துண்டிப்பது” என்று அதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா, சீனா, பிரேசில் – அமெரிக்காவின் டார்கெட்
இந்தியாவும், சீனாவும், பிரேசிலும் தற்போது ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்கி வரும் முக்கிய நாடுகளாக இருப்பதால், இவை அமெரிக்காவின் கடும் கவனத்தில் உள்ளன. ஆனால், இந்தியா மற்றும் சீனாவுக்கு அமெரிக்கா காட்டும் அணுகுமுறை ஒரே மாதிரியாக இல்லை. சீனாவுக்கு, மென்மையான போக்கு, இந்தியாவுக்கு கடுமையான அழுத்தம் என்று வெளிப்படையாகவே வேறுபாடு காணப்படுகிறது.
ட்ரம்ப் சீனாவிடம் ஏன் மென்மையாக நடந்து கொள்கிறார்?
சீனாவுடன் அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளாக வர்த்தக போர், அரசியல் மோதல் இருந்தாலும், இந்த விவகாரத்தில் ட்ரம்ப் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இதற்குக் காரணம் Rare Earth Minerals (அரிய கனிமங்கள்) மீது சீனாவுக்கு இருக்கும் கட்டுப்பாடு.
இந்த அரிய கனிமங்கள் இல்லாமல்: மின்சார வாகனங்கள் (EVs), செமிகண்டக்டர்கள், ராணுவ உபகரணங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் இவற்றை உற்பத்தி செய்வதே சாத்தியமில்லை. உலகில் மிகப்பெரிய அளவில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடாக இருந்தாலும், சீனாவுக்கு அமெரிக்கா எந்த கூடுதல் சுங்க வரியையும் விதிக்கவில்லை. மாறாக, ஆகஸ்ட் 12 அன்று, டிரம்ப் சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த புதிய சுங்க வரிகளை ஒத்திவைத்து, அவற்றை 30% ஆகவே வைத்தார்.. இது இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளைவிட மிகவும் குறைவு.
சீனாவின் பழிவாங்கும் திறன்- அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்
ஏப்ரலில், சீனா அமெரிக்காவுக்கு அரிய கனிமங்கள் மற்றும் மேக்னெட்கள் ஏற்றுமதிக்கு உரிமம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், அமெரிக்க கார் தொழிற்சாலைகள், டெக்னாலஜி நிறுவனங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தன. சீனாவில் இருந்து இந்தப் பொருட்கள் சிறிது காலம் கூட வராமல் போனால், அமெரிக்க தொழிற்துறையே முடங்கும் நிலை உருவாகும்.
இந்த காரணத்தால் தான், சீனாவுடன் கடுமையாக மோதினால் அமெரிக்காவின் சொந்த தொழில்துறையே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த ட்ரம்ப் அரசு சீனாவுக்கு எதிராக கடுமையான வரி போரை நடத்தாமல், பேச்சுவார்த்தை வழியைத் தேர்வு செய்கிறது.
இந்தியாவுக்கு ஏன் கடுமையான அணுகுமுறை?
இந்தியாவுக்கு சீனாவைப் போல உலக விநியோக சங்கிலிகளை முடக்கக்கூடிய சக்தி இல்லை. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி வருவதை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கிறது, வர்த்தக தடைகள் ஏற்படுத்துகிறது என்று ட்ரம்ப் அடிக்கடி விமர்சித்து வந்துள்ளார்.
எனவே இந்தியாவிற்கு மொத்தம் 50% வரை சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் “இந்தியா ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கி ரஷ்ய பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது” என்று அமெரிக்கா கூறுகிறது.
“மோடி என்னை மகிழ்விக்க முயன்றார்” – ட்ரம்ப்
அமெரிக்க ஹவுஸ் GOP கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் “எனக்கு மோடியுடன் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் இந்தியா அதிக வரி அறவிடப்படுவதால் அவர் மகிழ்ச்சியில்லை.
அதனால் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்து என்னை மகிழ்விக்க முயன்றார்” என்று கூறினார். மேலும், “மோடி நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் என்னை சந்தோஷப்படுத்த முயன்றார்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் உதவவில்லை என்றால்,
மேலும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் பதில்
இந்திய அரசு, “மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக ட்ரம்புக்கு உறுதி அளித்தார்” என்ற ட்ரம்பின் கூற்றை முழுமையாக மறுத்தது. அப்படி எந்த உரையாடலும், எந்த உறுதியும் வழங்கப்படவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் வாங்குவது தொடர்பாக, அமெரிக்கா சீனாவுக்கு மென்மையாகவும், இந்தியாவுக்கு கடுமையாகவும் நடந்து கொள்வது, தற்போதைய சர்வதேச அரசியல் சக்தி சமன்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
Read More : பாகிஸ்தானின் ரூ. 45 கோடி அமெரிக்க லாபி.. இந்தியாவின் ஆபரேஷன் சிந்துரை நிறுத்த 60 முறை கெஞ்சியது அம்பலம்..!



