தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து ட்விஸ்ட் கொடுத்தார். தவெகவில் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இல்லை என பேசப்பட்டு வந்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் உறுதியளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல்படி, கடந்த சில வாரங்களாக இந்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வந்தன.
இதில், தொகுதிப் பங்கீடு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வலுவான கூட்டணியை உருவாக்குவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய்யின் TVK-க்கு, இந்தக் கூட்டணி அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் ஆதரவு பெரும் பலனளிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டால், தமிழக அரசியலில் வலுவான அணிக்கான தொடக்கமாக இது அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read more: சூரியன்-சந்திர சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி கஷ்ட காலம்..! கவனமா இருங்க..



