ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான சமையலின் போது, 46 வயதான சுஜாதா என்ற பெண் எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவின் எல்.ராவ் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை காலை அன்னதானத்திற்கான உணவு சமைக்கும் பணியில் அமைப்பாளர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
அப்போது சமையல் தயாரிப்புகளின் போது, பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாருக்கு அருகில் நகர்ந்தபோது சுஜாதா எதிர்பாராதவிதமாக தன் கட்டுப்பாட்டை இழந்து கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள்ளேயே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விஜயவாடா டூ டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



