கரூர் மாவட்டம் பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா என்ற பெண் ஆட்டோ டிரைவருக்கும் கார்த்திக்கிற்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கார்த்திக் தகாத வார்த்தைகளால் பேசி ஜோதிகாவை அடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கபட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு செப்டம்பர் 29ஆம் தேதி அவர் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனது சித்தப்பா வீட்டில் இரண்டு தங்கைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை நேரம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்தனர். இதனை அறிந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் வீட்டின் சுவர் பகுதியில் பயத்துடன் மறைந்து ஒளிந்து கொண்டார். ஆயுதங்களுடன் வந்த ஐந்து நபர்கள் தங்கைகளின் கழுத்தில் கத்தியை வைத்து கார்த்திக் எங்கே எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். அண்ணன் இங்கே வரவில்லை என எவ்வளவு சொல்லியும் கேட்காத மர்ம நபர்கள் வீடு முழுக்க தேடி பார்த்து கார்த்திக்கை கண்டுபிடித்தனர்.
அதன் பின் தங்கைகள் கண் முன்னே கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததுன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.