எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்..!! நீதிபதிகள் எச்சரிக்கை..!!

chennai high court 11zon

தமிழகம் முழுவதும் பரவியுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்படும் எனக் கூறுவது பணிகளை தாமதப்படுத்தும் அதிகாரிகளின் தந்திரம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை செயல்படுத்துவதற்காக வருவாய்த்துறைச் செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்ததோடு, நீதிமன்றக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து பரவியுள்ள சூழலில், கள ஆய்வு என்ற பெயரில் நிதி ஒதுக்கீட்டை தள்ளிப்போடுவது பணிகளை முடக்கும் செயல் எனக் கூறி தங்களின் கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி போதுமான அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். அந்த நிதியிலிருந்து சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றுவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் தலா ரூ.5 கோடி ரூபாயை எவ்வித தாமதமுமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.

மேலும், முதற்கட்டமாக நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்தத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More : எங்களுக்கு கார் வேண்டாம்..!! அதற்கு பதில் இதை பண்ணுங்க..!! MLA சௌமியா அன்புமணி அதிரடி அறிவிப்பு..!!

Next Post

பாவங்களைப் போக்கும் தானம்... புண்ணியம் சேர்க்கும் தர்மம்..!! என்னென்ன பொருட்கள் வழங்கலாம்..?

Sat Aug 22 , 2026
மனிதப் பிறவியின் மிக உன்னதமான கடமைகளில் முதன்மையானதாக போற்றப்படுவது தான தர்மங்கள் செய்வதாகும். ஒருவர் நம்மிடம் கேட்டு தருவதை ‘தானம்’ என்றும், அவர்களின் வறிய நிலையை உணர்ந்து கேட்காமலேயே கொடுப்பதை ‘தர்மம்’ என்றும் நமது ஆன்மிக மரபு வரையறுக்கிறது. தானம் என்பது முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டது; தர்மம் என்பது வாழ்க்கையில் அளப்பரிய புண்ணியங்களைச் சேர்த்து சுபிட்சத்தை அள்ளித்தரக்கூடியது. நாம் பிறருக்கு வழங்கும் ஒவ்வொரு […]
Dhanam Dharmam 2026

You May Like