தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற, நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 1972 மற்றும் விதிகள் 1973, சட்டப்பிரிவு 2(டி)-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஓராண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் தொழிலாளியின் பங்காக ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ.40 என மொத்தம் ரூ.60 வீதம் 2025-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையை 2025 டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு 2026 ஜனவரி 1-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் wmis.lwb.tn.gov.in என்ற வாரிய இணையதளத்தில் தங்களது நிறுவனத்தை தொழிலாளர் நல நிதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை இணைய தளம் வாயிலாக செலுத்தி ரசீதை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே lwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் தற்போது செயல்பட்டுவரும் Iwmis.lwb.tn.gov.in என்ற இவ்வாரிய webportal-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.