பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேட்ட அந்த கேள்வி – இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்? என்பது. அவரது கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”எனக்கு நீங்கள் சொல்வது ஆச்சர்யமளிக்கிறது. இந்தியாவை ஜனநாயக நாடு என்று அழைக்கும்போது, அங்கு பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் அரசு வழங்கும் பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளன. சாதி, மத அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை.
அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜனநாயகம் என்பது நமது மரபணுவிலேயே உள்ளது. ஜனநாயகம்தான் நமது உத்வேகம். ஜனநாயகம் நம் நரம்புகளில்கூட ஓடுகிறது. ஆகவே நாங்கள் ஜனநாயகத்தில்தான் வாழ்கிறோம் என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியுடன் பேச வாய்ப்பு நேர்ந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கத் தவறினால் ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுபடத் தொடங்கிவிடும் என்று கூறுவதே என் உரையாடலின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும் என்று இருநாட்டு தலைவர்கள் (மோடி – பைடன்) சந்திப்புக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கின் கேள்வி அமைந்துள்ளதாக ஒருசாரார் விமர்சித்தனர். ‘பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இப்படி விமர்சனம் செய்வதா?’ என்ற கேள்வியும் மறுபுறம் எழுந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் மீதான பலமுனை தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ”பத்திரிகை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஒரு பத்திரிகையாளரை அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் எந்தவொரு முயற்சியையும் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு முரணானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.