கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெற உள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக நவம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்களில் நவம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பாடத்திட்டம், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.