நீங்கள் இதயத்தையே மாற்றிவிட்டீர்களே!. பேரவையில் ஓபிஎஸ்-செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்!

திமுக அரசின் திட்டங்களே பட்ஜெட்டில் இருப்பதாக கூறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, இடம் மாறியதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழகத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 அன்றும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 அன்று வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், 3-வது நாளான இன்று காலை 9:30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

விவாதத்தில் முதலாவதாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்த பட்ஜெட் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, தவெக அரசு பழைய திட்டங்களையே பெயர் மாற்றம் செய்து புதிய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஏமாற்றத்தின் வழிகாட்டியாக மட்டுமே உள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கான ரூ.2,500 உரிமைத் தொகை உயர்த்தப்படவில்லை; ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் திமுகவின் சாதனைகளும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களின் புது வடிவங்களுமே ஜொலிக்கின்றன. இந்த அரசின் புதிய திட்டங்களை நான் தேடுகிறேன், தேடுகிறேன்… தேடிக்கொண்டே இருக்கிறேன்” என்று ஓ.பி.எஸ் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த உரைக்கு அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக குறுக்கிட்டு பதிலடி கொடுத்தார். “வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். 3 மாதங்களிலேயே அனைத்தையும் செய்து முடித்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறியிருந்தாலும், அதற்காக இவ்வளவு தூரம் துதி பாட வேண்டிய அவசியமில்லை” என்றார். அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், “முதலில் அணி மாறியதே செங்கோட்டையன் தான்” எனச் சாடினார்.

அப்போது குறுக்கிட்ட, அமைச்சர் ராஜ்மோகன், “அமைச்சர் செங்கோட்டையன் இடத்தை முதலில் மாற்றியிருந்தாலும், அவரது சட்டையில் இருக்கும் ‘அம்மா’வின் நிழல் மாறவில்லை. அதுவே எங்கள் முதலமைச்சர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மனமும் மாறிவிட்டது, பாக்கெட்டில் உள்ள புகைப்படமும் மாறிவிட்டது” எனக் குறிப்பிட்டார். இதேபோல், தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், எங்கள் அண்ணன் செங்கோட்டையன் அணி மாறினாலும் அவரது இதயத்தில் அம்மாவை வைத்துள்ளார். ஆனால், நீங்கள் அணியையும் மாற்றிவிட்டீர்கள், இதயத்தையும் மாற்றிவிட்டீர்கள். இப்போது உங்கள் சட்டை பையில் யாருடன் போட்டோ வைத்துள்ளீர்கள் என உங்களுக்கே தெரியும் என்றார். அப்போது தலையிட்ட சபாநாயகர், இரு தரப்பினரும் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் கண்ணீருடன் தவிப்பதாகத் தெரிவித்தார். காவலர்களுக்கான போதிய ஊதிய உயர்வு அளிக்கப்படாதது, மாநிலத்தின் சொந்த வருவாய் சரிந்துள்ள நிலை, கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலையில் விவசாயிகள் அடைந்துள்ள ஏமாற்றம் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடன் வாங்காமல் எந்தவொரு அரசும் இயங்க முடியாது என்பதால், வாங்கிய கடனைக் கொண்டு எத்தனை திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளார்கள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சரைக் கடன் வாங்கியதற்காகக் குற்றம் சுமத்தக் கூடாது என்றும் வலியுறுத்திய அவர், இந்த பட்ஜெட் மிகுந்த வேதனையளிப்பதாகவும் கூறினார்.

1newsnationuser5

Next Post

நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே… 101 கிடாக்கறி; உருண்டைச் சோறு!. பாரம்பரிய வினோத திருவிழா!

Tue Aug 11 , 2026
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியக் கிடாக்கறி விருந்துத் திருவிழா நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்களுக்கு அனுமதியின்றி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் இந்த வினோத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய 101 ஆடுகள் சுவாமிக்குப் பலியிடப்பட்டன. […]
dindugalvirunthu

You May Like