மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா நகர் அருகே துங்கௌலி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, யாரும் இல்லாத இடத்திற்கு சென்று பல இடங்களில் காரை நிறுத்தி இளம்பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓடும் காரில் இருந்து இளம்பெண்ணை தூக்கி வீசிவிட்டு அந்த மர்மநபர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் லோனாவாலா நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். மேலும் விரைவாக செயல்பட்ட காவல்துறையினர், 12 மணி நேரத்திற்குள், சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றன.
லோனாவாலா நகர காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ராமகரே கூறுகையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார், மேலும் மற்ற இரண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை தூண்டியுள்ளது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக புகார் அளிக்க முன்வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.