இலங்கையின் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடலில் நிலவிய சூறைக்காற்று காரணமாக இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. இதனால் நெடுந்தீவு அருகே அந்தப் படகு தரைதட்டி நின்றதாக கூறப்படுகிறது.
அந்தப் படகில் இருந்த ரமேஷ், அமல தீபன், கெர்சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்சர்ட், வெள்ளைச்சாமி, அந்தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்கிய அசோக் மற்றும் பெரியகருப்பன் என மொத்தம் 11 மீனவர்கள் வியாழக்கிழமை காலை நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து, நெடுந்தீவு போலீஸார் 11 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர், 11 பேரையும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை வலியுறுத்தும் வகையில், இன்று (சனிக்கிழமை) ராமேஸ்வரத்தில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட



