சத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 5 நாட்களில் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மக்களை இணைப்பதில், இந்திய ரயில்வே தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. சத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பயணம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு பயணியும் தங்கள் இலக்கை பாதுகாப்பாகவும் வசதியாகவும் அடைவதை உறுதி செய்ய ரயில்வே கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமான ரயில் சேவைகளைவிட கூடுதலாக, அடுத்த ஐந்து நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 300 சிறப்பு ரயில்களுடன் மொத்தம் 1500 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரயில்களைத் தவிர, கடந்த 21 நாட்களில், சராசரியாக தினமும் 213 சேவைகள் வீதம், மொத்தம் 4,493 சிறப்பு ரயில் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு தீபாவளி பண்டிகைகளுக்கு பயணிகள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவின.இந்த ஆண்டு சத் பூஜை மற்றும் தீபாவளி சீசனுக்காக, பயண நெரிசலை சமாளிக்க இந்திய ரயில்வே ஒரு வலுவான சிறப்பு ரயில் அட்டவணையை இயக்கி வருகிறது. அக்டோபர் 1, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை 61 நாட்களில், நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை, மொத்தம் 11,865 பயணங்கள் (916 ரயில்கள்) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 9,338 பயணங்கள் முன்பதிவு செய்யப்பட்டவை மற்றும் 2,203, முன்பதிவு செய்யப்படாதவை ஆகும். இது கடந்த ஆண்டு இயக்கப்பட்ட 7,724 சிறப்பு ரயில்களை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. பண்டிகைக் காலத்தில் சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதில் இந்திய ரயில்வேயின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது போன்ற முன்முயற்சிகள் பிரதிபலிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.



