எலும்பு முறிவு அறுவை சிகிச்சை.. 19 வயது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

27531ac12a74b1ba71efef980184e7acbb67499a7a48043eb7379ba7f94103cc

முழங்கை எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட 19 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் மருத்துவத் தவறு நடந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூரைச் சேர்ந்த அர்ஜுன் – சசிகலா தம்பதியரின் மகள் சுபஸ்ரீ. சென்னையில் உள்ள அப்பல்லோ கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, குழந்தை தவறி விழுந்துள்ளது. அதைப் பிடிக்க முயன்ற சுபஸ்ரீயும் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில், அவரது இடது முழங்கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதற்காக முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 21-ம் தேதி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய மாலையே முழங்கையில் உலோகத் தகடுகள் பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே சுபஸ்ரீக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பைத் தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 15 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபஸ்ரீ, இன்று காலை 9.06 மணியளவில் உயிரிழந்தார்.

மகளின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையின் சிகிச்சை முறையே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினர். நுரையீரல் பாதிப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்றும் கூறி, மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்தனர்.

இதையடுத்து, குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள், ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

மறுபுறம், மாணவி கீழே விழுந்தபோதே மார்பு மற்றும் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பாதிப்பின் தீவிரத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்ததாகவும், மருத்துவ நெறிமுறைகளின்படி நிபுணர்கள் மூலம் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை மீது உறவினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Also Read: “நீ செத்துத் தொல.. எனக்கு இன்ஸ்டாகிராம் தான் முக்கியம்!” 6 வயது மகளை கொடூரமாகத் தாக்கிய தாய்..

Saranya

Next Post

வங்கிகளுக்கு RBI போட்ட புதிய உத்தரவு.. அக்டோபர் 16 முதல் அதிரடி மாற்றம்!

Mon Oct 12 , 2026
வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு பராமரிப்பு விதிகளில் முக்கிய மாற்றத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இதன்படி, வங்கிகள் ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச ரொக்கக் கையிருப்பு விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறை 2026 அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் கணக்கீட்டுக் காலம் முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளின் பணப்புழக்க நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவை ரிசர்வ் […]
RBI 2026

You May Like