வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு பராமரிப்பு விதிகளில் முக்கிய மாற்றத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இதன்படி, வங்கிகள் ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச ரொக்கக் கையிருப்பு விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறை 2026 அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் கணக்கீட்டுக் காலம் முதல் அமலுக்கு வருகிறது.
வங்கிகளின் பணப்புழக்க நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பில், கணக்கீட்டுக் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வங்கிகள் தங்களுக்கான கட்டாய ரொக்கக் கையிருப்பில் குறைந்தபட்சம் 99 சதவீதத்தைப் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த விதிப்படி, வங்கிகள் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட ரொக்கக் கையிருப்பில் குறைந்தபட்சம் 90 சதவீதத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், 14 நாட்கள் கொண்ட கணக்கீட்டுக் காலத்தின் சராசரி இருப்பு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை எட்ட வேண்டும். தற்போது தினசரி குறைந்தபட்ச வரம்பு 99 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
CRR என்றால் என்ன?
CRR (Cash Reserve Ratio) என்பது வங்கிகள் தங்களிடம் உள்ள நிகரத் தேவை மற்றும் காலப் பொறுப்புகளின் (NDTL) குறிப்பிட்ட சதவீதத்தை ரிசர்வ் வங்கியிடம் ரொக்கக் கையிருப்பாக வைத்திருக்க வேண்டிய விகிதமாகும். வங்கித் துறையில் பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும், பணவியல் கொள்கையைச் செயல்படுத்தவும் இந்த நடைமுறை உதவுகிறது.
இந்த மாற்றத்தால், வங்கிகள் தங்களது தினசரி பண இருப்பைக் கூடுதல் கவனத்துடன் நிர்வகிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, திடீர் பண வெளியேற்றம் ஏற்படும் சூழலில், ரொக்கக் கையிருப்பை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குக் கீழே குறைப்பதற்கான வாய்ப்பு குறையும். இதனால் வங்கிகளின் குறுகிய காலப் பணப்புழக்க மேலாண்மையிலும் தாக்கம் ஏற்படலாம்.
இருப்பினும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அடிப்படை CRR விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கணக்கீட்டுக் காலத்தின் சராசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டிய மொத்த ரொக்கக் கையிருப்பு விதியும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச அளவை மட்டுமே 90 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
Also Read: எலும்பு முறிவு அறுவை சிகிச்சை.. 19 வயது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!



