அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் முடித்துக் கொண்டு தற்பொழுது மூன்றாவது கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பேசிய அவர்: அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக வீட்டுமனை இல்லாவிட்டாலும், நிலம் வழங்கி வீடுகளைக் கட்டித் தருவோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தாய்மார்களுக்கு தரமான சேலை வழங்குவோம்.
மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம்.
தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்களைக் கண்டு கொள்வதில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும். 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றார்.