திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மற்றொருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கடந்த 21-ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. டாக்டர் பல்ராம் சிங் VS யூனியன் ஆஃப் இந்தியா (வழக்கு எண். 324 – 2020) வழக்கில் 10.10.2023 -ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையின் நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதேனும் இருந்தால், அது தொடர்பான விவரங்களும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: ஊழல் ஒழிக்க.. ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்…! ஆந்திர முதல்வர் கோரிக்கை