காதலித்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த நிலையில், தற்போது சாதியை காரணமாகக் கூறி திருமணத்திற்கு மறுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் அந்தோணியார் கோவில் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே சூரியூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் குறித்து சண்முகப்பிரியாவின் தாய்க்கு தெரியவந்தபோது, சுரேஷ்குமாரிடம் மகளின் எதிர்காலம் குறித்து அவர் பேசியுள்ளார். அப்போது சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக சுரேஷ்குமார் உறுதியளித்ததாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்காலத்தில் திருமணத்திற்கு பிரச்சினை ஏற்படுமா என்பதை சண்முகப்பிரியாவின் தாய் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும், குடும்பத்தில் உள்ள மற்ற திருமணங்களை முடித்த பின்னர் சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் சுரேஷ்குமார் கூறியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சண்முகப்பிரியாவின் வீட்டிற்கு சுரேஷ்குமார் தொடர்ந்து சென்று அவரது குடும்பத்தினருடன் பழகி வந்துள்ளார். திருமணம் குறித்தும் தொடர்ந்து உறுதி அளித்து வந்த நிலையில், தற்போது அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக சண்முகப்பிரியா புகார் அளித்துள்ளார்.
தற்போது சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் சுரேஷ்குமார் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், சாதி வேறுபாட்டை காரணமாகக் கூறி திருமணத்தை நிராகரிப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுரேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் சண்முகப்பிரியாவின் தாய் நேரில் சென்று பேசியபோது, இரு சமூகங்களுக்கும் இடையே திருமணம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷ்குமாரிடம் சண்முகப்பிரியா பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அவர் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருப்பதுடன், தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்த்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்ற சண்முகப்பிரியா, காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாதியை காரணமாகக் கொண்டு திருமணத்தை மறுக்கும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடமும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் இருதரப்பினரின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
Also Read: விஜய் – ஸ்டாலின் மோதல் தீவிரம்.. தாடை சைகைக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்! மீண்டும் பரபரக்கும் தமிழக அரசியல்..



