இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் வழக்கமான சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுவைத் தாக்கல் செய்த தரப்பினர் மருத்துவர்கள் என்றால், நாட்டின் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் சுகாதாரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இதுபோன்ற வழக்கு மிகவும் தீவிரமானது என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். தடுப்பூசி திட்டத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் போதிய நியாயமான காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் வாய்மொழியாகக் குறிப்பிட்டது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் HPV தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகளை கண்காணிப்பதற்கான நடைமுறை குறித்தே கேள்வி எழுப்புவதாகவும் விளக்கினார். மேலும், தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான உரிய இழப்பீட்டு நடைமுறை அவசியம் என்றும் வாதிட்டார்.
எனினும், மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகக் கூறி நீதிமன்றம் அதனை முடித்து வைத்தது.
இந்த மனுவை Universal Health Organisation என்ற அமைப்பு தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் HPV தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் விதம், தடுப்பூசி செலுத்துவதற்கு முன் உரிய ஒப்புதல் பெறுதல், தனிநபரின் உடல் சார்ந்த உரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அம்சங்களில் விதிமீறல்கள் இருப்பதாக மனுவில் வாதிடப்பட்டது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி ராஜஸ்தானின் அஜ்மீரில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு Gardasil 4 என்ற HPV தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தப்படுகிறது. HPV-யின் 16 மற்றும் 18 வகைகளுக்கு எதிராக இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது. இந்த இரு வகை வைரஸ்களும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் முக்கியமாக தொடர்புடையவை. மேலும் HPV-யின் 6 மற்றும் 11 வகைகளுக்கு எதிரான பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்குகிறது.
Also Read: திருமணம் செய்வதாக ஆசை காட்டி 3 ஆண்டுகள் காதல்.. கடைசியில் சாதியை காரணம் காட்டி பின்வாங்கிய காதலன்!



