மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுமுறை மற்றும் 2 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த 30 நாட்கள் விடுப்புகளை முதிய பெற்றோர்களை கவனித்து கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு தெளிவான வழிகாட்டுதல் என தெரிவித்துள்ளார்.
மற்ற விடுமுறை
குழந்தை பராமரிப்பு விடுமுறையை பொறுத்தவரை 730 நாட்கள் வழங்கப்படும் நிலையில், இந்த விடுமுறையின் போது விடுமுறை பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விடுமுறையின் போது வெளிநாட்டுப் பயணத்திற்கான சலுகைகளையும் அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிப்பதற்கான விடுமுறை சலுகையை 15 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைக்கும் விதி 43சி, பெண்களின் நலன் கருதி நீக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அவர்களது அகவிலைப்படியில் 25 சதவீதத் தொகையான மாதம் 3 ஆயிரம் ரூபாய் சிறப்புப் படியாக வழங்கப்பட்டு வந்தது. இதனை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த 2022 ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. மகப்பேறின் போது குழந்தை இறக்கும்பட்சத்தில் மனஅளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிறப்பு மகப்பேறு விடுப்பாக 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.