நடைபயிற்சி என்பது பலரின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகி விட்டது. ஆனால் இதை எப்படி சரியாக மேற்கொள்வது என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. 666 நடைபயிற்சி விதி என்றால் என்ன, இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மாற்றம் என்பது வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் அல்ல, முற்றுமுழுதாக மாறிவிட்டது. நகர்ப்புற வாழ்க்கை, மேசை வேலைகள், மின்னணு சாதனங்களில் செலவழிக்கும் நேரம் – இவை அனைத்தும் ஒருவரின் உடலையும், மனதையும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. உடல் நலக்குறைவுகள், மன அழுத்தம், தூக்கமின்மை, வயதுக்கு முந்தைய குறைபாடுகள் என எண்ணற்ற பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றன.
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக இருக்கக்கூடியது நடைபயிற்சி. ஆனால், நடைபயிற்சியை எப்போது, எப்படி, எவ்வளவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல், தொடங்குவதிலேயே தடுமாறுவோர் பலர். இந்த இடத்தில்தான் “666 நடைபயிற்சி விதி” மிகவும் பயனுள்ளதாக அமைக்கிறது.
வாரத்தில் 6 நாட்கள், காலை 6 மணிக்கு, 6 கிலோமீட்டர் நடப்பது என்பதே இந்த நடைபயிற்சி முறையின் அடிப்படை. இதனுடன், நடைபயிற்சிக்கு முன் 6 நிமிட வார்ம் அப்பும், பிறகு 6 நிமிட கூல் டவுனும் கட்டாயமாக செய்யப்பட வேண்டும். இது உடலை முழுமையாக இயக்கும் பயிற்சி முறை.
இதன் நன்மைகள் என்ன?
இதய நலத்திற்கு: இதயத்தின் பம்பிங் சக்தியை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயம் குறைகிறது.
எடை குறைக்கும்: தினமும் 6 கிமீ நடப்பது அதிக கலோரி எரிக்கிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து, எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
மன நலத்திற்கு: நடைபயிற்சியால் ‘எண்டோர்பின்’ ஹார்மோன்கள் அதிகமாக உருவாகின்றன. இது மன அழுத்தத்தை குறைத்து, சந்தோஷ உணர்வை அதிகரிக்கிறது.
செரிமானத்துக்கு: காலையில் நடப்பதால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.
எலும்பு, மூட்டு நலத்துக்கு: இடைவிடாமல் நடப்பது எலும்புகள் வலிமையடையச் செய்கிறது. மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
வாரத்தில் வெறும் 6 நாட்கள் மட்டும் காலையில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பொதுவான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இந்த வழக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மன அமைதியையும் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மேம்படுத்த உதவுகிறது.