பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நில அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இதுவரை 200-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பனாமாவின் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளும் பொதுக் கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 900 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை மீட்புக் குழுவினர் இன்னும் முழுமையாகச் சென்றடையாததால், சேத விவரங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெராகுவாஸ் மற்றும் லாஸ் சாண்டோஸ் மாகாணங்களில் குறைந்தது 14 பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, அவசரநிலையின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செலவினங்களால் 2026-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை இலக்கு பாதிக்கப்படாது என பனாமாவின் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்துக்குப் பிறகும் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டாலும், அவற்றின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக பனாமா பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநர் நெஸ்டர் லூக் தெரிவித்துள்ளார். மேலும், நில அதிர்வுகளுக்கு இடையிலான கால இடைவெளியும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பனாமாவுக்கு உதவுவதற்காக அமெரிக்கா 5 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் உதவவும், சேதமடைந்த கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும் 20 பேர் கொண்ட குழுவை அனுப்புவதாக அமெரிக்கத் தூதர் கெவின் மரினோ கப்ரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சாலைகள் மற்றும் பால்களை விரைவாகச் சீரமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தடையின்றிச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலநடுக்கத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்று வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Also Read: வங்கிகளுக்கு RBI போட்ட புதிய உத்தரவு.. அக்டோபர் 16 முதல் அதிரடி மாற்றம்!



