செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இன்று இணைய உள்ளனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவின் முக்கியத் தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார் இபிஎஸ். இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலையில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசியுள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதியாகிவிட்டது.
செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இன்று இணைய உள்ளனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர்.
விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியினர் தேமுதிகவில் இணைந்தனர். கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதுகூட பல முன்னாள் அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் அவரின் கட்சியில் இணைந்தனர். ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்து இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எந்த மாற்றுக் கட்சியினரோ, திரைப் பிரபலமோ, முன்னாள் அரசு அதிகாரிகளோ தவெகவில் இணையவில்லை. அந்தக் குறையை ஒருவழியாக போக்கியுள்ளார் செங்கோட்டையன். எனவே, இது உறுதியாக தவெகவுக்கு பலமாக மாறியுள்ளது’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.



