ஒரு புதிய மாதம் தொடங்கும்போது வங்கி சேவை, வருமான வரி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, எரிவாயு சிலிண்டர் என பொதுமக்களின் அன்றாட செலவுகளுடன் தொடர்புடைய பல விதிமுறைகளும் மாறுகின்றன. அந்த வகையில், 2026 அக்டோபர் 1 முதல் வாடிக்கையாளர்கள், வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் கவனிக்க வேண்டிய பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
இதில் வங்கி ATM பயன்பாடு, UPI மூலம் வணிகர்களுக்கு செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள், LPG மானியம் பெறுவதற்கான ஆதார் சரிபார்ப்பு, வருமான வரி தாக்கல் காலக்கெடு, NPS கட்டணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
RBI வட்டி முடிவு அக்டோபர் 7
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு கூட்டம் அக்டோபர் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2026 ஆய்வுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் முடிவு வங்கிக் கடன்களின் வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றுக்கான EMI மற்றும் வங்கிகளின் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடன் மற்றும் முதலீடு வைத்திருப்பவர்கள் இந்த அறிவிப்பை கவனிப்பார்கள்.
SBI ATM பயன்பாட்டில் புதிய வரம்பு
SBI-யின் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ATM மற்றும் ADWM இயந்திரங்களை பயன்படுத்தும்போது கிடைக்கும் இலவச பரிவர்த்தனை வரம்பில் மாற்றம் செய்யப்படுகிறது.
அக்டோபர் 1 முதல், மற்ற வங்கிகளின் ATM-களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதில் பணம் எடுப்பது போன்ற நிதிப் பரிவர்த்தனைகளும், இருப்புத் தொகை பார்ப்பது போன்ற நிதி சாராத பரிவர்த்தனைகளும் சேர்க்கப்படும். இதற்கு முன்பு இந்த வரம்பு 10 பரிவர்த்தனைகளாக இருந்தது.
BSBD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு 4 பணம் எடுக்கும் பரிவர்த்தனைகள் இலவசமாக தொடரும். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் GST கட்டணம் வசூலிக்கப்படும்.
வருமான வரி தாக்கல் செய்வோருக்கு கால அவகாசம்
வரி தணிக்கைக்கு உட்படும் வரி செலுத்துவோருக்கு CBDT காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான Tax Audit Report-ஐ தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 21, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரி தணிக்கைக்கு உட்படும் தொழில்கள் மற்றும் தொழில்முறை நபர்களுக்கான ITR தாக்கல் காலக்கெடு அக்டோபர் 31-ல் இருந்து நவம்பர் 21, 2026 வரை மாற்றப்பட்டுள்ளது.
ரூ.2,000-க்கு மேல் சில UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய MDR விதிமுறை
அக்டோபர் 15 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வணிகர் பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பணப்பரிவர்த்தனைகளுக்காக புதிய Merchant Discount Rate (MDR) கட்டமைப்பு அமலுக்கு வருகிறது.
இந்த கட்டணம் வணிகர், பணப்பரிவர்த்தனை அமைப்பு மற்றும் வங்கிகளுக்கு இடையிலான ஏற்பாட்டைச் சார்ந்தது. பொதுமக்கள் UPI மூலம் பணம் அனுப்பும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நபருக்கு நபர் பணப்பரிமாற்றங்களும், ரூ.2,000 வரையிலான கொள்முதல் பரிவர்த்தனைகளும் வழக்கம்போல் இலவசமாக தொடரும்.
LPG மானியத்திற்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு
அரசு மானியம் பெறும் வீட்டு LPG வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு முக்கியமாகிறது.
சிலிண்டரை நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையில் (RSP) முன்பதிவு செய்து, அரசின் மானியத்தைப் பெறுவதற்கு ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும். இதை முடிக்காதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படாது என்றாலும், மானியம் இல்லாத சந்தை விலையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
Bulk Deposit வட்டி விகிதத்தை காலை 10 மணிக்குள் வெளியிட வேண்டும்
வங்கிகளின் பெரிய தொகை வைப்பு (Bulk Deposit) வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் RBI புதிய விதிமுறையை அமல்படுத்துகிறது.
Regional Rural Banks உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தங்களது Bulk Deposit வட்டி விகிதங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்ட அட்டவணைப்படி வெளியிட வேண்டும். ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்குள் இந்த வட்டி விகிதங்கள் இணையதளத்தில் இடம்பெற வேண்டும். அதிகபட்சமாக 10.10 மணி வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
NRI-யிடம் சொத்து வாங்குவோருக்கு TAN கட்டாயம் இல்லை
NRI-யிடம் இருந்து அசையா சொத்து வாங்கும் இந்திய குடியிருப்பாளர்கள் மற்றும் Hindu Undivided Family (HUF) அமைப்புகளுக்கான TDS நடைமுறையிலும் மாற்றம் வருகிறது.
அக்டோபர் 1 முதல், NRI-யிடம் சொத்து வாங்கும்போது TDS பிடித்தம் செய்வதற்காக தனியாக TAN பெற வேண்டிய அவசியம் இல்லை. வாங்குபவர்கள் தங்களது PAN எண்ணை பயன்படுத்தியே TDS பிடித்தம், தொகையைச் செலுத்துதல் மற்றும் அது தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய முடியும்.
இதனால் TDS செலுத்த வேண்டிய விதிமுறை நீக்கப்படவில்லை; அதற்கான நடைமுறை மட்டுமே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
NPS கட்டண முறையிலும் மாற்றம்
தேசிய ஓய்வூதிய திட்டமான NPS மற்றும் NPS Lite-ல் Point of Presence (PoP) மூலம் இணையும் சந்தாதாரர்களுக்கான கட்டண அமைப்பையும் PFRDA மாற்றியுள்ளது.
புதிய கட்டண விதிமுறைகளின் கீழ், PoP வாயிலாக NPS-ல் புதிதாக இணையும் சந்தாதாரர்களிடம் வசூலிக்கப்படும் கட்டண அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் NPS மூலம் ஓய்வூதிய சேமிப்பை தொடங்குபவர்கள், கணக்கைத் திறக்கும் முன் பொருந்தக்கூடிய கட்டண விவரங்களை கவனிப்பது முக்கியமாகிறது.
இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள், UPI பயன்படுத்துபவர்கள், LPG மானியம் பெறுபவர்கள், வரி செலுத்துவோர், NPS சந்தாதாரர்கள் மற்றும் சொத்து வாங்குபவர்கள் தங்களுக்கு பொருந்தக்கூடிய புதிய விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
Also Read: 13 ஆண்டுகளாக நீடித்த வழக்கு.. சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.20,000 அபராதம்…



