இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, செப்டம்பர் 2-ம் தேதி காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றார். ஆனால், அன்றைய தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுமி செய்த சிறிய தவறுக்காக தந்தை திட்டியிருப்பது தெரியவந்தது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த மாணவி, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளம் மூலம் பழகிய பிராட்வே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சஞ்சய் (20) என்பவருடன் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை மீட்டனர். இதையடுத்து, சஞ்சய் மீது சிறுமியை கடத்தியது மற்றும் சிறாரை தவறாக பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டில் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார்.



