நீதிமன்றம் மூலம் நியாயத்தை பெற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்ததுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அ.தி.மு.க.வினரை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர்செல்வம் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவியை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம், எனவே அவர் செய்தது மிகப்பெரிய துரோகம்.
மேலும் காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு திட்டமிட்டு வேண்டும் என்றே சீல் வைத்துள்ளனர். எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா, ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு, அவர் தகுந்த வெகுமதி வழங்கியுள்ளார். அடிபட்ட நிர்வாகிகள் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி வழங்கியது. அவர்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக தகவல் கிடைத்தவுடன். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் இருந்தும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறினார்.