சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் ஈ அல்லது நைரோபி ஈ என்ற பூச்சியால் ஏற்படும் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.. இதே போல் மேற்குவங்க மாநிலத்திலும் இந்த பூச்சியால் ஏற்படும் பாதிப்பு பரவியது..
இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்திலும் இந்த வகை ஆசிட் ஈ தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. பீகாரின் கிழக்குப் பகுதிக்குள் நைரோபி ஈக்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பூர்ணியா மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது..பீகாரின் பூர்னியா, கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா ஆகிய மூன்று மாவட்டங்களில் ஈக்கள் படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இது மாநிலம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள பல அறிவுறுத்தல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.. அதன்படி முழு கை ஆடைகளை அணிவது, மாலையில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, கொசுவலை பயன்படுத்துவது, வீட்டிற்குள் மங்கலான விளக்குகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டால், மக்கள் உடனடியாக சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..
நைரோபி ஈ தொற்று என்றால் என்ன..? கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நைரோபி ஈக்கள் கென்ய ஈக்கள் அல்லது டிராகன் ஈக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சிறிய, வண்டு போன்ற பூச்சிகள் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன.. இந்த பூச்சிகள் பொதுவாக சிக்கிம் போன்ற அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.. பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களை பாதிக்கப்படுகின்றனர்.
நைரோபி ஈக்கள் பிரகாசமான ஒளி மற்றும் ஈரமான பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.. இந்த ஈக்கள் பொதுவாக பயிர்களை அழித்து பூச்சிகளை உண்ணும். நைரோபி ஈக்கள் கடிக்காது என்றாலும், மனிதர்களின் தோலின் மீது இருந்தாலே அவை எரிச்சலை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அமிலப் பொருளை வெளியிடுகின்றன. எரிச்சலை ஏற்படுத்தும் நச்சுப் பொருள் பெடரின் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொற்று ஏற்பட்டால், தோல் எரிச்சல், தோல் அழற்சி அல்லது புண்களை ஏற்படுத்தும். சிறிய கொப்புளங்கள் ஏற்படுவதுடன் அந்த நச்சு உடலில் அதிகமாக பரவி காய்ச்சல், நரம்பு வலிகள், மூட்டு வலிகள் அல்லது வாந்தியெடுத்தல் போன்றவற்றை உண்டாக்கினால் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்படலாம். நச்சுகள் நபரின் கண்களுடன் தொடர்பு கொண்டால், அது வெண்படல அழற்சி மற்றும் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..