கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூரில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு(36). இவர் கடந்த 2013-ஆம் வருடம் காவல் துறையில் வேலையில் சேர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கோமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு பெண்ணுக்கும், மணியரசுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் வருகிற 1-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் திடீரென்று மணியரசு தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். வீட்டிலுள்ளவர்கள் அவரை சமாதானம் செய்தனர். அப்போது, இரவு வேலைக்கு சென்று விட்டு வந்து பதில் சொல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து இன்று காலையில் அவரது பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை மணியரசு எடுக்கவில்லை. இதை தொடர்ந்து பெற்றோர்கள் கோமங்கலம் காவல் நிலையத்திற்கு அவரை தேடி சென்றனர். ஆனால் அவர் இங்கு இல்லை. எனவே, பணியில் இருந்த காவல்துறையினர் அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். அதையும் அவர் எடுக்காததால், அவர் அருகில் இருக்கும் போலீஸ் குடியிருப்பிற்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். இதனால், அவரது பெற்றோருடன் அங்கு சென்று பார்த்த போது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
காவல்துறையினர் கதவை தட்டி பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறி பொருத்தும் கம்பியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை காவல்துறையினர், மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணியரசுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதற்கிடையில் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அவர் சம்மதம் சொல்லியுள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் விடுமுறை எடுத்துள்ளார். மேலும் வீட்டில் பெற்றோரிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் உன் விருப்பத்தை கேட்டு தான் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அந்த பெண்ணை தான் திருமணம்செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.