திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள குளத்தில் கடந்த 11-ஆம் தேதி கழுத்தை அறுத்து கொலை செய்ய பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் குன்னத்தூர் போலிசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்ட நபர் மயிலாடுதுறையை சேர்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது.
குளத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது ஆகாஷ் வேலை செய்த பனியன் கம்பெனியின் உரிமையாளர் அஜித் மற்றும் ஒரு இளைஞர் என இரண்டு பேர் சேர்ந்து வந்ததை கண்டறிந்தனர். உடனடியாக திருப்பூர் ராதா நகரில் பனியன் கம்பெனியி நடத்தி வரும் அஜித்(25) மற்றும் அவரிடம் பணியாற்றும் கார்த்திக்(26) என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல உண்மைகள் வெளியானது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த அஜித் திருப்பூரில் உள்ள ராதா நகரில் சொந்தமாக சிறிய அளவில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் ஆகாஷ் என்பவரை வேலையில் சேர்த்துள்ளார். பனியன் கம்பெனியில் டைலர் மற்றும் செக்கிங் வேலைக்கு நிறைய பெண்கள் வந்த நிலையில் அவர்களுக்கு ஆகாஷ் பாலியல் தொல்வை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் பல பெண்கள் வேலைக்கு வராமல் தவிர்த்துள்ளனர். இது தெரிந்த அஜித் ஆகாஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் அஜித்தின் பைக்கை திருடிக் கொண்டு மயிலாடுதுறை சென்று விட்டார்.
தொடர்ந்து ஆறு மாதங்களாக அவரை வேலைக்கு அழைத்தும் வராமல் இருசக்கர வாகனத்தையும் திருப்பித் தராமல் அலை கழித்துள்ளார். அஜித் தொடர்ந்து ஆகாஷை அழைத்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆகாஷ் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். ஆனால் பைக்கை திரும்ப கொண்டு வராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் அஜித் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்யும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை உதவிக்கு வைத்துக் கொண்டு ஆகாஷை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த பத்தாம் தேதி அன்று இரவு ஆகாஷை மது அருந்த அழைத்தார். மூவரும் சேர்ந்து குன்னத்தூர் அருகே இருக்கும் குளத்திற்கு சென்று மது அருந்தி உள்ளனர். அப்பொழுது ஆகாஷ் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் விசாரணையில் இதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு பைக்கை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.