செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் இருக்கும் சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (23) என்றும், மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி வயது (35) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும், கடந்த நான்காம் தேதி இருவரும் காணாமல் போனவர்கள் என்றும் தெரியவந்தது.
இறந்து போன முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரியப்பா மகன் ஆவார். அருள் ஜோதி சிறிய பையன் என்பதால் அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்றதால் அருள்ஜோதிக்கும் முத்துலட்சுமிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி இரு குடும்பத்தாருக்கும் தெரிய வந்ததால் குடும்ப உறுப்பினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையிலிருந்து காணாமல் போன நிலையில், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.