பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.18,300 பெறலாம்.
உலகிலுள்ள அனைவருக்கும் பணம் என்பது எப்போதும் எந்த வயதிலும் தேவையான ஒன்று. சம்பாதிக்கும் காலத்திலேயே சிறிதளவு பணத்தை சேமித்து வைத்துக்கொண்டால் அது நமது ஓய்வுகாலத்திற்கு பின்னர் நமது எதிர்கால நிதி தேவைகளை சமாளிக்க உதவியாக இருக்கும். ஓய்வுகாலத்திற்கு பிறகு நீங்கள் பணத்தை பற்றி கவலையில்லாமல் வாழ 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதியன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட ’பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க தொகையை ஓய்வூதியமாக பெறலாம். இத்திட்டம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முன்னர் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்யலாம் என்றிருந்த வரம்பு தற்போது ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து 60 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர்கள் ஓய்வூதியத்தைப் பெற முடியும். பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளருக்கு 7.40% வருமானத்தை அரசாங்கம் வழங்குகிறது. இத்திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பங்களிக்கலாம். மத்திய அரசின் இந்த திட்டத்தில் மனைவியோடு சேர்த்து ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் முதலீட்டாளரின் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.18,300 பெறலாம். அதுவே ரூ.1.5 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1000 கிடைக்கும். ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.9250 கிடைக்கும், கணவன், மனைவி இருவரும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.18500 ஓய்வூதியமாக கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் 2023 மார்ச் 31 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே உங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும் மற்றும் 10 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் முதலீடு தொகை மொத்தமும் உங்கள் கைக்கு வந்து சேரும். முதலீட்டாளர் இந்த 10 ஆண்டிற்குள் இறந்துவிட்டால், அடிப்படைத் தொகையை முழுமையாக பெறலாம். இந்த திட்டத்தில் சேர நீங்கள் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.