கரூர் மாவட்ட பகுதியில் மருதம்பட்டியில் கூலித் தொழிலாளியான முகேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஜோதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியது. அப்போது ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜோதி அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் முறைப்படி விசாரிக்க வேண்டும் என்றும் ஜோதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.