திருடர்கள் முன்பெல்லாம் தாங்கள் திருடிய நகைகளை வாடிக்கையாக ஒரு கடையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாவார்கள்.
இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது புது விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மெட்ரோ பணிக்கு குழி தோண்டும்போது புதையல் கிடைத்தது, வட இந்தியாவில் சுரங்கத்தை தோண்டும் போது புதையல் கிடைத்தது என்று பல பொய்களை தெரிவித்து போலி நகையை விற்க வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சார்ந்த பாலமுருகன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த 2 நபர்கள் களிமண் எடுப்பதற்காக ஆற்றில் குழி தோண்டிய போது தங்கப் புதையல் கிடைத்தது எனவும், நல்ல விலை கொடுத்தால் அதனை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். பாலமுருகனும் இதனை நம்பி புதையலை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அந்த இரு நபர்களும் பாலமுருகனை சந்தித்து ஒரு முத்து மாலையை வழங்கி உள்ளனர்.
இதனைப் பார்த்து சந்தேகமடைந்த பாலமுருகன் தீவிரமாக சோதனை செய்து அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்று கண்டுபிடித்தார். உடனடியாக பாலமுருகன் அந்த நபர்களிடம் பேச்சு கொடுத்தபடியே அமர வைத்துவிட்டு வில்லிவாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் இருவரையும் பிடித்து நடத்திய அதிரடி விசாரணையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரூ மற்றும் அர்ஜுன் என்ற நபர்கள் தான் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
இந்த இரு ஆசாமிகளும் கர்நாடகத்திலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகளை எடுத்து வந்து சென்னையில் பல பகுதிகளில் விற்பனை செய்திருப்பதும், இந்த விசாரணையில் தெரியவந்தது. அம்பத்தூரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 2 கிலோ எடையுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகளை காவல்துறை கைப்பற்றி இருக்கிறது. போலி நகைகளில் அதிகமாக முத்துமாலைகளே இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.