சுவாச நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்..

ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் இருந்தபோது, வட கொரியா நீண்ட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் தற்போது வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.. ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் வெப்பநிலை சோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அங்கு தற்போது சுவாச நோய் பரவி வருவதாகவும், அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடவில்லை.. சுவாச நோய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.. அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, பியோங்யாங் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர்.
பெரும்பாலான விஷயங்களை ரகசியமாக வைத்திருக்கும் நாடாக வட கொரியா அறியப்படுகிறது.. மேலும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பபதை உறுதிப்படுத்தாததால், கொரோனா பாதிப்பின் சரியான எண்ணிக்கை கூட தெரியவில்லை. வட கொரியா கடந்த ஆண்டு தனது முதன்முதலாக கொரோனா பரவியதாக ஒப்புக்கொண்டது, ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் வைரஸை கட்டுப்படுத்திவிட்டோம் என்றும் அந்நாடு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது