பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் மீது தாய்மையின் பொறுப்பை சுமத்துவது கண்ணியத்துடன் வாழ்வதற்கான மனித உரிமையை மறுப்பதாக அமையும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி, தனது கருவை கலைக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அனுமதிக்கப்பட்ட 24 வாரங்களுக்கு அப்பால் இருந்த 25 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலக்க முடியாது என கூறவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள்; பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரை குழந்தையைப் பெற்றெடுக்க கட்டாயப்படுத்துவது விவரிக்க முடியாத துயரங்களை ஏற்படுத்தும் என்றும், பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் கர்ப்பத்தில் விளையும் வழக்குகள் இன்னும் அதிர்ச்சிகரமானவையாக இருக்கிறது. இதுபோன்ற சோகமான தருணத்தின் நிழல் ஒவ்வொரு நாளும் நீடிக்கிறது என்றும் உயர் நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

கர்ப்பத்துடன் உடனடியாக தொடர்புடைய சமூக, நிதி மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற கர்ப்பம் நிச்சயமாக பாதிக்கப்பட்டவரின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதி சர்மா கூறினார். எனவே, சிறுமி கர்ப்பத்தை கலைக்க நீதிபதி அனுமதி அளித்தார்.