கேள்வி கேட்ட கணவர் முகத்தில் மனைவி ஆசிட் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே கூப்பர் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் டப்பு. இவரது மனைவி பூனம். இந்நிலையில், இரவு நேரம் வீட்டுக்கு தாமதமாக வந்த மனைவியை அவரது கணவர் டப்பு கேள்வி எழுப்பியுள்ளார். “ஏன் தாமதமாக வீட்டிற்கு வந்தாய்.. இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய்” என தனது மனைவியிடம் கேட்டுள்ளார். கணவர் தொடர்ந்து கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி பூனம், கோபத்தில் கணவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
இதனால், அலறி துடித்த டப்புவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, டப்புவிடம் காவல்துறையினர் விசாரிக்கையில், தனது மனைவி பூனத்திடம் ஏன் வீட்டுக்கு தாமதமாக வந்தாய் என்று கேட்டபோது மனைவி கோபமடைந்து தன்னிடம் சண்டையிடத் தொடங்கியதாகவும், ஆத்திரத்தில் கழிவறையில் இருந்த ஆசிட்டை தன் மீது ஊற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.