தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சார்ந்த லாரி டிரைவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுமதி இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது இளைய மகள் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் நடந்திருக்கின்றன. மேலும் கண்ணன் தன் வருமானத்தை அந்தப் பெண்ணிற்கு கொடுப்பதன் காரணமாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் நடந்திருக்கின்றன. சுமதி தான் பீடி சுற்றும் தொழில் செய்து தனது இரு மகள்களையும் வளர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மாலை மகள்கள் இருவரும் வெளியே சென்றிருந்த நேரம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சுமதி கண்ணனை கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் சுமதியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் அலறி துடித்த சுமதி வீட்டில் இருந்து வெளியே தப்பித்து ஓடி இருக்கிறார். ஆனாலும் விடாத கணவன் தெருத்தெருவாக அடித்துச் சென்றிருக்கிறார் சுமதியை. ஒரு கட்டத்தில் அவர் வலி பொறுக்க முடியாமல் அங்கிருந்து முத்தாரம்மன் கோவிலுக்குள் ஓடி தப்பிக்க நினைத்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கண்ணன் கோவிலில் இருந்த கம்பியை எடுத்து சுமதி என் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் சுமதி. பின்னர் கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி .சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சுமதியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக நெல்லை ஹய் கிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கண்ணனை அத்தியூத்து என்ற இடத்தில் வைத்து கைது செய்தது காவல்துறை. ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்களது தாயின் உடலை பார்த்து கதறி அழுத மகள்களின் கண்ணீர் ஓலம் அங்கிருந்த அவர்களின் மனதை பிழிய செய்தது.