உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நாள் இந்திய வரலாற்றின் கருப்பு நாளாக மாறிய தினம்.. ஆம்.. கடந்த 2019-ம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ம் நாளில் தான் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.. இந்த கொடூர தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது..
2019 பிப்ரவரி 14-ம் தேதி, மொத்தம் 2,547 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) 78 பேருந்துகளில் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலைவழியாக சென்ற போது, மதியம் சுமார் 3 மணிக்கு அங்கு வந்து கொண்டிருந்த ஸ்கார்பியோ கார், பாதுகாப்பு படையினர் கான்வாய் பேருந்து மீது மோதி பயங்கரமாக வெடித்தது. இந்த கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெயிஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த 20 வயதான அடில் அகமத் தர் என்ற தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரில் தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
1989-ம் ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு படையினர் மீது நடந்த கொடூரமான தாக்குதலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டின.
வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என்றும், எதிரிகள் நிச்சயம் பழிவாங்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி வீர ஆவேசத்துடன் தெரிவித்தார். பாதுகாப்பு படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு உலக நாடுகள் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிர்த்து போராட இந்தியாவிற்கு துணை நிற்பதாகவும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
பாகிஸ்தானின் நட்பு நாடாக விளங்கும் சீனா கூட, கோழைத்தனமான புல்வாமா தாக்குதல் தொடர்பான ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தது. ஐ.நா சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமல்லாத நாடுகள் ஆகியவற்றால் இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் நடைபெற்று 12 நாட்கள் கழித்து, பிப்ரவரி 26-ம் தேதி, இந்திய விமானப் படையினர் பாகிஸ்தால் உள்ள ஜெயிஷ் இ தீவிரவாத முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் உள்ள பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட அதிகளவிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
பாலகோட் வான் வழி தாக்குதலுக்கு மறு நாள் பிப்ரவி 27-ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் நடத்தவிருந்த தாக்குதலை இந்திய விமானப் படை முறியடித்தது.இந்த வான்வழி மோதலில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் ஓட்டிய MiG-21 ரக போர்விமானம், பாகிஸ்தான் விமானப்படையின் F-16 என்ற உயர்ரக போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
எனினும் பாராசூட் மூலம் தப்பித்த போது அபிநந்தன் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் ராணுத்தின் பிடியில் சிக்கினார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு பிறகு அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இரண்டு நாட்கள் கழித்து இந்தியாவின் ஹீரோவாக அபிநந்தன் நாடு திரும்பினார்.
இந்த தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.. இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.. புல்வாமா தாக்குதல் நடண்டு 4 ஆண்டுகள் ஆகிறது, ஆனால், இன்றுவரை, தாக்குதலில் வீரமரணம் சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவாக பிப்ரவரி 14 ஆம் தேதி ‘கறுப்பு நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. இந்த புல்வாமா தாக்குதல் நினைவுகள் இந்தியர்களின் மனதில் மாறாத வடுவாக மாறி உள்ளது..