காரைக்காலை சார்ந்த பெண் துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண்ணின் உடலை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் கீழ காசாக்குடி என்ற பகுதியைச் சார்ந்தவர் தேவதாஸ். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். இவரது நான்கு பெண் குழந்தைகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலை குழுக்களாக நடனமாடி வந்துள்ளனர். இவரது இரண்டாவது மகளான அருணாவுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அருணா சென்னையில் இருக்கும் தனியார் முகவர் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நாட்டிற்கு ஹோட்டல்களில் நடனமாடுவதற்காக சென்றார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட இவர் விரைவில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்த சூழ்நிலையில் அபுதாபியில் இருந்து அவரது குடும்பத்தை தொடர்பு கொண்ட நிறுவன ஊழியர்கள் அருணா உடல்நலம் சரியில்லாமல் மரணம் அடைந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அவர்களை தொடர்பு கொண்டு துபாய்க்கு சென்ற அருணா மர்மமான முறையில் மரணம் அடைந்து விட்டதாகவும் அதன் காரணமாக அவரது உடலை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.