மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்களும் சரிவர கவனிக்காததால் தனிமையிலேயே இருந்திருக்கிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக தனது மகன்களின் வீட்டில் சுழற்சி முறையில் சாப்பிட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த அவர் தனக்கு யாரோ செய்வினை வைத்ததே காரணம் என நம்பி இருக்கிறார் ராமசாமி. மேலும் தனக்கு மருமகள் தான் செய்வினை வைத்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பி இருக்கிறார். இந்நிலையில் அவர் நேற்றிரவு தனது மூத்த மகன் வீட்டிற்கு உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தனது மருமகள் ஜோதிலட்சுமியிடம் நீ எனக்கு செய்வினை வைத்ததால் தான் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது எனக் கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் வாக்குவாதம் தீவிரம் அடையவே மோதலாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமசாமி ஜோதிலட்சுமியை வெட்டி இருக்கிறார். இதில் ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சென்னிமலை காவல்துறையினர் இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.