மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற மாணாக்கர்களில் பெரும்பாலான மாணாக்கர்களின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணாக்கர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
மேலும் வங்கி கணக்கு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் போஸ்ட் ஆபிசில் கணக்கு எண் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மாணாக்கர்கள் ஆதார் எண் மற்றும் தொலைப்பேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல் அலுவலகத்தில் வங்கி கணக்கு எண் துவங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.