தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சரத் பாபு. தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக அண்ணாமலை திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நண்பராக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் குணச்சித்திர நடிகனாகவும் வில்லனாகவும் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி இரண்டு முறையும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற இவர் சென்னையில் வசித்து வருகிறார். 71 வயதான சரத்பாபு உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரை உலகினர் அவர் விரைவில் குணமாகி வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.