ஒடிசா மாநிலம் சவுத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் இருக்கிறது. அங்கே உள்ளூர் நண்பர்கள் ஒன்று இணைந்து பிரண்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்று விளையாடினார்கள்.
பொழுதுபோக்குக்காக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரௌட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக செயல்பட்டார். போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் வீசியதாக சைகை காட்டி இருக்கிறார். அது நோ பால் இல்லை என்று பந்துவீச்சாளரும் பில்டிங் செய்து கொண்டிருந்த அணியின் மற்ற வீரர்களும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்கள். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
பில்டிங் அணியில் இருந்த வீரர்கள் பேட்டை எடுத்து நடுவரை தாக்க முயற்சித்தனர். அப்போது ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கியை கத்தியால் குத்தியிருக்கிறார். இதனைக் கண்டு பதறிப்போன அருகில் இருந்த மற்றவர்கள் நடுவராக இருந்த லக்கியை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களின் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் நோ பால் கொடுத்ததற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.