கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தனர். அதேபோல கேரளாவிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வந்தனர். பொதுமக்கள் முதலில் செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று இந்த நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள்.
ஆனாலும் அந்த நிறுவனம் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
முதல் கட்ட விசாரணையில் 1000 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க டி. எஸ். பி முருகானந்தம், ஆய்வாளர்கள் ராஜசேகர், லட்சுமி, வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய நிலையில் தான் நேற்று கோயமுத்தூருக்கு வருகை தந்த தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் முடக் நிதி மோசடி தொடர்பாகவும், அதன் விசாரணை நிலை தொடர்பாகவும் தனிப்படை காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். விசாரணையை வேகப்படுத்தவும், தொடர்புடைய நபர்களை கைது செய்து அவர்கள் வாங்கி குவித்த சொத்துக்களை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறார்.