முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையெட்டி சேலம் மாவட்டத்தில் 24.06.2023 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன் பெறும்வகையில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 24.06.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி பகுதியிலுள்ள மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜலகண்டாபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெங்கவல்லி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேச்சேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏற்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் வரும் 24.06.2023 சனிக்கிழமை அன்று சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்காணும் சிறப்பு மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ மற்றும்இசிஜி, மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், கண்,காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பியல், மனநலம் உள்ளிட்ட பன்நோக்கு மருத்துவ ஆலோசனை சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவும் உள்ளது. மேலும், சித்த மருத்துவம் ஆயுர்வேத சிகிச்சை, தொழுநோய் சிகிச்சை மற்றும் காசநோய் சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.