பொதுவாக வாழைப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றாக வாழைப்பழம் உள்ளது.
இந்த வாழைப்பழத்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்றாலும், இந்த வாழைப்பழத்தால் சில உபாதைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் அடிப்படையில், இந்த வாழைப்பழத்தை எப்படி? எந்த நேரத்தில்? சாப்பிட வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
இந்த வாழைப்பழம் என்பது குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும். ஆகவே இதனை அனைத்து சமயங்களிலும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்த பின்னர் இந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதேபோன்று, மாலை வேளையில் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இரவு வேளையில் வாழைபழங்களை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
உணவோடு அல்லது உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் இந்த வாழைப் பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.
மாறாக வாழைப்பழங்களை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடலாம். இல்லையெனில் உணவு உட்கொண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம். மற்ற பழங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, நன்றாக பழுத்த வாழைப்பழமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், இதன் நிலைகள் என்ன என்பதை பொறுத்து அந்த பழத்தின் நன்மைகள் மாறுபடும் என்கிறார்கள்.
வாழைக்காயில் இருக்கின்ற புரோபயோடிக் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். அதே போல, பழுக்காத வாழைப்பழத்தில் நார்சத்து அதிகமாகவும், சர்க்கரை சத்து குறைவாகவும் காணப்படும்.
பழுத்த வாழைப்பழங்களில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் இருக்கும். நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கும். அதோடு, இவற்றை ஜீரணிப்பது மிகவும் எளிதாகும். அதிக அளவில் பழுத்த வாழைப்பழத்தில் புற்று நோய்க்கு எதிரான சக்தியை ஏற்படுத்தக்கூடிய திறன் உள்ளது. இந்த பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் மிகவும் சுவையாக காணப்படும்.