புதுச்சேரி பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் (40). இவர் ஒப்பந்தத்திற்கு கட்டடங்கள் கட்டும் பணியை எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (37). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விவேக் பிரசாத்திடம் பாபு என்கிற ஷேக் பீர் முகமது என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பின்னாளில் அவர் சூப்பர்வைசராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், பாபுவுக்கும் விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவேக் பிரசாத்திற்கு தெரியாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த கள்ளக்காதல் ஜோடியின் வாழ்வில் வசந்தம் வீச தொடங்கியது. இந்த விஷயத்தை ஒருமுறை விவேக் பிரசாத் நேரடியாக பார்த்துவிட்டார். இதையடுத்து ஜெயந்தியை அழைத்து நமக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதெல்லாம் தவறு, இனி அந்த ஆளுடன் பழக வேண்டாம். இத்தோடு விட்டுவிட்டு குடும்பத்தை பார் என கூறியுள்ளார். விவேக் பிரசாத் கூறிய பிறகு இவர்கள் தனிமையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை.
இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து, விவேக் இருக்கும் வரை நம்மால் பழைய மாதிரி சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த இருவரும் அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி, 2017ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரியில் உள்ள பூத்துறை பகுதியில் கட்டடப் பணிகளைப் பார்க்க சென்ற விவேக் பிரசாத்தை அங்கு சென்ற பாபு கத்தியால் குத்திவிட்டு அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்து விட்டார். இந்நிலையில், அன்றைய தினம் ஒப்பந்த பணிகளை பார்வையிட சென்ற தனது கணவர் வீடு திரும்பவில்லை என ரெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விவேக் பிரசாத் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதை அறிந்த போலீசார் அவருடைய சடலத்தை தோண்டி எடுத்தனர்.
அப்போது மனைவி ஜெயந்தி அங்கே வந்து எதுவுமே தெரியாதது போல் கதறி அழுதார். இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் பாபுவுக்கும் ஜெயந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததன் காரணமாக இருவரும் ஸ்கெட்ச் போட்டு விவேக்கை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இத்துடன் பாபுவுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், ஜெயந்திக்கு ரூ.2,000 அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.